கர்த்தரே! மீண்டும் உயிர்த்தெழுங்கள்… !!!!

31 05 2010
அன்று..
ஊமையை பேச வைத்தீர்!
குருடருக்கு பார்வை தந்தீர்!
செவிடரை கேட்க வைத்தீர்!
இறந்தவரை உயிர்ப்பித்தீர்!
இன்று… நாங்கள் ..
பேச முடிந்தும் – எங்கள் நாட்டின்
அவலங்களை எதிர்த்து
பேசும் ஊமையாய் இருக்கிறோம்.
பார்வை இருந்தும் – நடக்கும்
அநியாயங்களை தட்டி கேட்காமல்
கண்ணிருந்தும் காணதது போல் இருக்கிறோம்.
கேட்க முடிந்தும் – தினம் விழும்
உதவிக் குரல்களை உதாசீனப் படுத்தி
கேளாதது போல நடிக்கிறோம்.
மொத்தத்தில் – குடிமக்களாய்
வாழாமல் வெறும் நாட்கள் கடத்தும்
மாக்களாய் தான் இருக்கிறோம்.
ஆகவே கர்த்தரே!!!
மீண்டும் உயிர்த்தெழுங்கள்…
ஆமென்.


முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல ! – வித்யாசாகர்

11 05 2010

காற்றின் அசைவுகளில்
ஏக்கமாகப் படிந்த கறையது
ஈழ விடுதலை;

ஈழவரலாற்றில்

ரத்தத்தால் தொய்ந்த பகுதி

முள்ளிவாய்க்கால்!

அழகிய ஆனந்தபுரத்தை

சுடுகாடாக்கி -

சமாதியின்றி பல போராளிகளை

செய்திக்கு – மரணப் படையலிட்ட பெருந் துயரம்

முள்ளிவாய்க்கால்!

சதைகிழிந்து

உறுப்புகள் சிதறி

உடல் துண்டிக்கப் பட்டு

அரை உயிரில் மிச்சப் பட்ட இனத்தையும்

ஈ மொய்த்து நோய் தின்ற கொடுமை

முல்லிவைக்கால் கொடுமை;

போர் கடந்து

போர் முறை கடந்து

கர்ப்ப வயிறு கிழித்து

முதியோர் கால்கள் நறுக்கி

அப்பாவிப் மக்களையும்

போராளிகளையும்

எம் தலைவர்களையும்

சிங்களனின் கோழைத் தனத்தால்

சதியில் வீசிய நச்சுக் குண்டினால்

கொன்று குவிக்கப் பட்ட வன்முறை கொடுமை

வேறெங்கு நடந்திருக்குமோ தொழர்களே;

கூடின்றி – பறந்து பறந்தே

கால்கள் ஒடிந்தும் -

இறக்கம் சுரக்கா இதயமென்ன

இரும்பாலானதோ சிங்களனுக்கு?

தமிழனுக்கு தனிநாடு கிடைப்பதில்

என்ன தகராறோ பிறத்தானுக்கு??

தட்டிப் பறிக்க துணிந்த போது

தீவிரவாதி பச்சை குத்திய

நீதிபதிகளுக்கு -

என் சகோதரிகளின் கற்பு

காற்றில் பறந்தாலென்ன;
கடையில் விற்றாலென்ன ‘என்றானதோ??

பார்வை முழுக்க  மரணத்தையும்

நினைவு முழுக்க துரோகத்தையும்

வாழ்க்கை முழுக்க -

இரண்டாம் பட்ச இனமாய் வாழும் வலியையும் கொண்ட

எம் – தமிழன் என்றாலே தீண்ட தாகாதென்று

த்தீக் – கங்கெனக் கனன்ற சிங்களருக்கு

துணை போன தேசங்கள் எம் தமிழரிடம்

என்ன பகை கொண்டதோ???

லட்சாதி லட்ச உயிர்களை ஒருவன்

கொன்று குவிக்கையில் – எதிர்த்து

நிறுத்த இயலா உலக நாடுகளுக்கிடையே -

‘உயிர்பிச்சை கேட்டு சமாதனம் செய்ய வந்தவனை’

வலுவேத்தி ஆயுத உதவி புரிந்த

தோழமை தேசம் எந்தெந்த தேசமோ; தெரியவில்லை;

கரை உடைந்தோடிய

ரத்தக் காட்டாறும்,

எரிந்து சாம்பலான

உடல் புகுந்த நெருப்பின் வீச்சும்

தனை சுட்டிடாத – மமதையில்
நீதியுரைத்த மானுடமே……
மனிதமற்றுப் போனாயோ நீ????

போகட்டும் -

கண்ணீரில் மையெடுத்து -

வெறும் கவிதையெழுதும் தருனமில்லையிது தோழர்களே..

இரத்தத்தில் உணர்வூட்டி

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்றடிக்கும்

பறையிது உடன் பிறப்பே;

குட்ட குட்ட குனிபவனல்ல

தமிழன் -

தருணம் காத்து உயரத்தில்

எட்டிப் பறக்க இருக்கும் வீர ஜாதி -

எம் ஈழ ஜாதி!

கை கோர்தத் தேசமெல்லாம்……………

(எமை வேரறுக்க) கைகோர்த்த தேசமெலாம் -

என்ன சதி தீட்டுமோ தீட்டட்டும்

அதையெல்லாம் உடைத்தெறிந்து – ஈழம்

வெற்றிமுரசு கொட்டும் நாள் -

வெகு தொலைவிலில்லை தோழர்களே!

ஈழமென்ன வெறுங் கனவா?????

ஈழமென்ன வெறுங் வெற்றுக் கனவா -

நாலு நச்சு குண்டில் – மாயும் சமாதியடைய?????

ஈழம் எம் விடிவு;

ஈழம் எம் வேட்கை;

ஈழம் எம் மூச்சு;

ஈழம் எம் விடுதலை;

ஈழம் எம் தேசம்;

எம் இரத்தம் சொறிந்த மண்ணின் தாகம் – ஈழம்!
முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல தோழர்களே!
————————————————————————————————



வறுமை

28 02 2010

காலங்கள் மாறுகிறது

கடமைகளும் மாறுகிறது. – ஆனால்

வறுமை மட்டும்  மாறவில்லை.

சட்டங்கள் மாற்றமாகிறது

திட்டங்கள்  வகுக்கப்படுகிறது

வறுமை மட்டும்  தீர்க்கப்படவில்லை!

வானமழுதால்

வெள்ளம் புரளும்  அந்த

புறம்போக்கு நிலம்.

சட்டிச் சோற்றுக்காய்

வற்றிய வயிறுகள்

வாழுகின்ற இல்லம்.

கந்தையும் கிழிசலும்

அவர்களது  உடை.

ஒட்டிய வயிற்றுடன்…..

பார்க்க நெஞ்சு குமுறுகிறது.

அவர்கள் உடம்புபடும்பாட்டை!

பாவங்கள்  நீங்க

புண்ணீயம் தேடி செல்கிறான் காசி -ஆனால்

ஏழைகளுக்கு  உதவினால் பாவம் தீராதா..

நீ யோசி!!!

- வெ.யுவராஜ்



காதல்

12 02 2010

அன்பே உன்னை வர்ணிக்க கம்பன் கவிதை வரிகளை தேடினேன் கிடைக்கவில்லை.

கண்ணதாசனிடம் சென்றேன் அவரும் மறுத்துவிட்டார்  !

பின்னர்தான் தெறிந்தது  அவர்களே

உன்னை வர்ணிக்க வார்த்தைகளை அகராதியில் புரட்டிக்கொண்டு இருக்கின்றனர் என்று.



வைரமுத்து கவிதைகள்

3 02 2010

1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

2. காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் – இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

3. சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!

4. சிற்றிலக்கியக் காலம்
தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் – மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் – நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் – வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் – வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்

5. தேசிய காலம்
சின்னஞ் சிறுகமலப் பூவினாள் – என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் – என்
கவியில் காதல்ரசம்
விண்ணில் நிலவெரியும் வேளையில் – பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே – அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?

6 .திராவிட காலம் – 1
இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?

7. திராவிட காலம் -2
விண் – அப்பம் போன்ற நிலவுவந்து – காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல – நான்
இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல – நீ
தள்ளியா நிற்பது? விடையாட வேண்டும் வாடி என் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே

8. புதுக்கவிதைக் காலம் -1
ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

9. புதுக்கவிதைக் காலம் – 2
உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்

வைரமுத்து



இலக்கியம்

2 02 2010

களத்தில்
நிற்கிறேன்…

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்..!

- காசி ஆனந்தன்



மனிதன்

2 02 2010

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

‘பசு பால் தரும்’
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
‘காகம்
வடையைத் திருடிற்று’
என்கிறான்.

இப்படியாக
மனிதன்…

- காசி ஆனந்தன்